அரசியல் கட்சிகளின் கொடிகளை நடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பொது இடங்களில் சட்டவிரோதமாக அரசியல் கட்சி கொடிகளை நடுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் கொடிகளை நடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சாலையோரம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் குழித்தோண்டி தங்களது கட்சி கொடிகளை நிரந்தரமாக நடுகின்றனர். அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால், சாலையோரம் ஏராளமான கொடிகளை நடுகின்றனர்.

இதற்காக சாலையோரம் எந்திரம் மூலம் குழி தோண்டும்போது, அடியில் புதைக்கப்பட்டுள்ள தொலைபேசி கேபிளில் சேதம் ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுமட்டுமல்ல, பூமியில் புதைக்கப்பட்டுள்ள மின்சார கேபிளில் சேதம் ஏற்பட்டு, குழி தோண்டும் தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி பலியாகின்றனர்.

இந்த குழி தோண்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதும் இல்லை. தகவல் தெரிவிப்பதும் இல்லை. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிகளை எல்லாம் அகற்றும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இதன்படி, அரசியல் கட்சி கொடிகளை போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அகற்றினார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசியல் கட்சி கொடிகளை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட வேண்டும்.

பொது இடங்களில் கட்சி கொடிகளை நடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே 7-ந் தேதி கொடுத்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, அரசியல் கட்சிகளின் கொடிகளை பொது இடங்களில் சட்டவிரோதமாக நடுவதற்கு தடை விதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன், இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com