

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில மொழி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை உணர்ந்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தபால்துறை தேர்வை மாநில மொழிகளில் எழுத முடியாது என்றும், ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் எழுத முடியும் என்றும் அறிவித்த மிகப்பெரிய அநீதிக்கு எதிராக பா.ம.க. தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தான் மற்ற கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர். தபால்துறை தேர்வுகளில் நடந்த குழப்பங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனி நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த்-கி.வீரமணி
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால்துறை தேர்வு ரத்தானது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தமிழர்களின் உணர்வை மதித்து, இந்த தேர்வை ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால்துறை தேர்வை தமிழில் எழுதக் கூடாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராடியது; இதனை கண்டித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க- காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஆகியவற்றின் விளைவாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்-பாராட்டுகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.