பொள்ளாச்சி சிறுமி கற்பழிப்பு வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
பொள்ளாச்சி சிறுமி கற்பழிப்பு வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
Published on

சென்னை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று பல பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், 16 வயதுடைய சிறுமி ஒருவரை 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்துள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னை காதலித்த அமானுல்லா கடந்த ஜூலை 4-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏறச்சொல்லி ஊத்துக்குளி என்.வி.எம். நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு காலியிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பஸ்சில் வைத்து என்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் பகவதி, என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர்கள், மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்று என்னை வீட்டின் அருகே இறக்கிவிட்டனர். அப்போது அங்கிருந்த பிரபு என்பவர், என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று ஒரு அறையில் வைத்து மிரட்டி கற்பழித்தார். மறுநாள் காலை என்னை சீனிவாசபுரம் பாலம் அருகே அவர் இறக்கிவிட்டு சென்றார்.

அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவர் என்னை பார்த்து எங்கு சென்று வருகிறாய்? என்று விசாரித்தார். அவரிடம் நடந்த விஷயத்தையும், என் அப்பா குடிபோதையில் இருப்பார், என்னை பார்த்தால் கண்டிப்பாக அடித்துக்கொன்று விடுவார் என்று கூறினேன்.

உடனே அவர் சந்தைபேட்டையில் உள்ள அவரது நண்பர் செந்தில்குமார் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு செந்தில்குமார் என்னை மிரட்டி முதலில் உறவு கொண்டார். பின்னர் முகமது அலி என்னை மிரட்டி உறவு கொண்டார்.

பின்னர் என்னை கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றினர். கார் ஊத்துக்குளி அருகே சென்றபோது, நான் சத்தம் போட்டு கத்தியதால், என்னை அங்கு இறக்கிவிட்டு சென்று விட்டனர். இரவு முழுவதும் எங்கு போனாய் என்று என் சித்தி விசாரித்தபோது, இதையெல்லாம் அவரிடம் கூறினேன். இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தோம்.

என்னை முதலில் சினிமா சூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அருண் என்பவர் கூட்டிச் சென்றார். அவர் தான் என்னை ஆசைவார்த்தை கூறி முதலில் உறவு கொண்டார். பின்னர் முகமது ரபீக், அவரது நண்பர் இர்ஷாத்பாஷா, சையது முகமது ஆகியோரும் சூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து பாட்டி வீட்டில் நான் இருந்தபோது, முகமது என்ற சேட்டு என்னை மிரட்டி உறவு கொண்டார். இவ்வாறு அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

சிறுமியை பாலியல் கொடுமை செய்தவர்களில் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் அருண் உள்பட 3 பேர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் பிரபாவதி, மனுதாரர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களை ஜாமீனில் விடுவித்தால், வழக்கு விசாரணை பாதிக்கும். இவர்களது செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 3 பேர் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com