பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுசதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல் உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இவர்கள் மீது 2019-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். மேலும் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பையொட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் தண்டனை வழங்கும்போது வயதை கருத்தில் கொள்ள வேண்டுமென குற்றவாளிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
அதன்பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும். சட்டப்பிரிவு 376டி, 376என் ஆகிய பிரிவுகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது; பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சியளித்தனர்; வழக்கில் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கியப்பங்கு வகித்துள்ளன. அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். வீடியோக்களின் உண்மைத்தன்மையும் ஆராயப்பட்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.