

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) 1060 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் 28,29,30,31 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 129 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு மையங்கள் தேர்வர்களின் ஊரிலிருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. ஆனால், அதற்காக தேர்வர்களை அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று தேர்வெழுத வைப்பது நிச்சயமாக நல்ல சீர்திருத்தம் அல்ல.
எனவே, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். ஆன்லைன் போட்டித் தேர்வு முறையை எந்த தவறும் செய்ய முடியாத அளவுக்கு வலுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் போட்டித்தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து விட்டு, குறைகளை சரி செய்த பிறகு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.