

சென்னை,
சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது பாலிடெக்னிக் மாணவன் மாயனார். மாயமான மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாதவரம், அசிசி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 45). இவர் சினிமா உதவி இயக்குனராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் மூத்தமகன் சந்தோஷ் (17), பாலிடெக்னிக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சந்தோஷ் தனது நண்பர்களான திபேஸ் (17), கவுதம் (17), கே.சந்தோஷ் (17) ஆகியோருடன் நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.
நண்பர்கள் 4 பேரும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே மெரினா கடற்கரைக்கு சென்றனர். அப்போது அவர்கள் கடலில் குளிக்க முடிவு செய்ததாக தெரிகிறது. சந்தோஷ், திபேஸ் மற்றும் கவுதம் ஆகிய 3 பேரும் குளிப்பதற்கு கடலில் இறங்கியதாக கூறப்படுகிறது. கே.சந்தோஷ் மட்டும் அவர்களின் உடமைகளோடு கரையிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் சுமார் 30 நிமிடங்கள் கழித்து, குளிக்கச்சென்ற திபேஸ் மற்றும் கவுதம் இருவரும் கரைக்கு திரும்பினார்கள். ஆனால் சந்தோஷ் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் 3 பேரும் சந்தோஷை தேடினார்கள். நீண்ட நேரம் தேடியும் சந்தோஷை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போன நண்பர்கள் 3 பேரும், இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அண்ணா சதுக்கம் போலீசார் சந்தோஷின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்தோஷை தேடும் பணியில் இறங்கினார்கள்.
இரவு முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. சந்தோஷ் குளித்தபோது கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டாரா? அல்லது கடலில் இருந்து வழிதவறி எங்காவது சென்றாரா? என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.