தமிழகத்தில் 2-வது ஆண்டாக களையிழந்த காணும் பொங்கல் கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நேற்று 2-வது ஆண்டாக காணும் பொங்கல் களையிழந்தது. கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் 2-வது ஆண்டாக களையிழந்த காணும் பொங்கல் கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின
Published on

சென்னை,

கொரோனாவின் 3-ம் அலை பரவல் தற்போது மிக தீவிரமாக இருந்து வருகிறது. எனவே தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 9-ந்தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளான பெட்ரோல் பங்குகள், பாலகங்கள், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், அமரர் ஊர்தி சேவை ஆகியவை வழக்கம்போல செயல்பட்டன. அந்தவகையில் நகரில் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் 80 சதவீத ஓட்டல்கள் நேற்று செயல்படவில்லை. திறந்திருந்த ஒரு சில ஓட்டல்களிலும் பார்சல் சேவை மட்டுமே நடந்தது.

இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையின் குட்டி வணிகத்தீவு எனப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு பரபரப்பின்றியும், ஆள் அரவமின்றியும் நேற்று காணப்பட்டது.

சாலைகள் மூடல் - போலீசார் கண்காணிப்பு

முழு ஊரடங்கையொட்டி சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் முக்கிய சாலைகளான மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் தேவையில்லாமல் சுற்றிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

களையிழந்த காணும் பொங்கல்

காணும்பொங்கல் என்றாலே உற்சாகம் கரைபுரண்டு ஓடும் நாள் ஆகும். அன்றைய தினம் உறவினர்களை சந்தித்து மக்கள் மனம் மகிழ்வார்கள். சுற்றுலாத்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து உற்சாகம் அடைவார்கள்.

ஆனால் கொரோனா எனும் அரக்கன் இந்த காணும்பொங்கலை காணா தினமாக மாற்றிவிட்டான் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டும் காணும்பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக காணும்பொங்கல் களையிழந்து இருக்கிறது.

இதனால் காணும்பொங்கல் தினத்தன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும் கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்கள் நேற்று முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு என்பதால் மக்களும் நேற்று வீடுகளிலேயே முடங்கினர். அந்தவகையில் 2-வது ஆண்டாக காணும் பொங்கல் களையிழந்துள்ளது.

ரெயில்சேவை பாதிப்பு இல்லை

முழுஊரடங்கு என்றாலும் ரெயில் சேவை நேற்று வழக்கம்போலவே செயல்பட்டன. சென்னையிலும் வழக்கம்போலவே ரெயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் வாகனங்களில் பயணித்தனர். போலீசார் சோதனையின்போது உரிய டிக்கெட் மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை காண்பித்து பயணத்தை தொடர்ந்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக நகரில் நேற்று பெரும்பாலான ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயக்கப்படவில்லை. ரெயில் நிலையங்களை சுற்றி மட்டும் சில ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அவ்வப்போது இயக்கப்பட்ட ஆட்டோ-கால்டாக்சிகளும் கூடுதல் கட்டணம் கேட்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com