தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு; பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம்

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸையும் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக அரசானது, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசை அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேலும், பொங்கல் பரிசாக C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட முதல்வர் இன்று ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும்.

தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com