பொங்கல் ரொக்க பணம்: அ.தி.மு.க.வை மிஞ்சிய தி.மு.க.

பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட இருக்கிறது.
பொங்கல் ரொக்க பணம்: அ.தி.மு.க.வை மிஞ்சிய தி.மு.க.
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கப்பட இருக்கிறது.

அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. வரும் 8-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அன்றைய தினம் முதல், வரும் 14-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணி நாளை (திங்கள் கிழமை) தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 ரொக்க பணம் வழங்கியது இதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சியில் ரூ.3,000 பொங்கல் ரொக்க பணம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அ.தி.மு.க.வை தி.மு.க. மிஞ்சி நிற்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com