பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து 3 நாட்களில் 4 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 4 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து 3 நாட்களில் 4 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த3 நாட்களாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 11-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 50 பஸ்களுடன், கூடுதலாக 176 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 226 பஸ்களும், 12-ந்தேதி (நேற்று முன்தினம்) வழக்கமாக ஓடும் 2 ஆயிரத்து 50 பஸ்களுடன் கூடுதலாக ஆயிரத்து 950 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 50 பஸ்களுடன், கூடுதலாக ஆயிரத்து 952 சிறப்பு பஸ்களையும் சேர்த்து மொத்தமாக 4 ஆயிரத்து 2 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆக மொத்தம் 10 ஆயிரத்து 228 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பு பஸ்கள் மட்டும் 4 ஆயிரத்து 78 ஆகும்.

இந்த 3 நாட்களும் இயக்கப்பட்ட பஸ்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பஸ்கள் புறப்படுவதற்கு முன்பு கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு முன்பு கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com