பெரியார் திடலில் பொங்கல் விழா: திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருது - கி.வீரமணி வழங்கினார்

சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருதை, கி.வீரமணி வழங்கினார்.
பெரியார் திடலில் பொங்கல் விழா: திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருது - கி.வீரமணி வழங்கினார்
Published on

சென்னை,

சென்னையில் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27-வது ஆண்டு விழா, திராவிடர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு பெரியார் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மன்ற தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் திரைத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், இயக்குனர், நடிகர் போஸ்வெங்கட் ஆகியோருக்கு விருதுகளை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

திராவிடர் கழகத்தில் அறிவுக்கும், ஆற்றலுக்கும்,திறமைக்கும், துணிவுக்கும் பஞ்சம் இல்லை. கட்சிகளை கடந்து பல இளைய தலைமுறையினர் பலர் வருகின்றனர். உலக அளவில் திராவிட கொள்கைகள் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் இங்கு சிலர் திராவிடத்தை ஒழிப்போம் என்று பேசுகின்றனர். பொதுவாக நாங்கள் திரைப்படம் பார்ப்பதில்லை. எப்போதாவது கொள்கை ரீதியாக வெளிவந்தால் பார்ப்போம். இவர்கள் தயாரித்த படங்கள் கொள்கை ரீதியாக இருந்தது. பெரியாரும், திராவிடமும் இல்லாமல் இருந்து இருந்தால் பொங்கல் என்ற பண்டிகையோ நமக்கு இருந்து இருக்காது.

தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது, தை முதல் தேதியை தமிழர் புத்தாண்டாக அறிவித்தார். ஆனால் அது காலப்போக்கில் மாற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் மீண்டும் தை முதல் தேதி தான் தமிழர் புத்தாண்டு என்ற நிலை உருவாகும். தொழில் துறைக்கு காண்பிக்கும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு காண்பிக்கப்படுவதில்லை. இதனால் தான் டெல்லியில் விவசாயிகள் 52 நாளாக போராடி வருகிறார்கள். இங்கும, டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் அழுகிய பயிரை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள்.

தமிழகத்தில் மனுதர்ம ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தையும், பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.

விழாவிற்கு மன்ற செயலாளர் பரஞ்சோதி வரவேற்றார். துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுசெயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருதுகளை பெற்றவர்கள் ஏற்புரை வழங்கினார்கள். தமிழ்செல்வி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com