பொங்கல் பண்டிகை: சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விபரம்

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கண்ணூர், கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சேலம்,
சிறப்பு ரெயில்கள்
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாடி மகிழும் வகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். இதனால் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதையொட்டி சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்மேற்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் கண்ணூர், கொல்லத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-கொல்லம்
இதன்படி, பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) நேற்று இரவு 7.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்டது. அதேபோல், மறுமார்க்கத்தில் கண்ணூர்-பெங்களூரு சிறப்பு ரெயில் (06576) இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது. கண்ணூரில் இன்று காலை 11.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்து, பெங்களூருவுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல் பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06219) வருகிற 13-ந் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.15 மணிக்கு வந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரெயில் (06220) வருகிற 14-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5.20 மணிக்கு வந்து பெங்களூருவுக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.
கண்ணூர்-பெங்களூரு
மேலும், மற்றொரு ரெயிலாக பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரெயில் (06577) வருகிற 13-ந் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூருவில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு இரவு 9.27 மணிக்கு வந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூருக்கு அடுத்தநாள் காலை 7.50 மணிக்கு சென்றடைகிறது.
அதபோல் மறுமார்க்கத்தில் கண்ணூர்-பெங்களூரு சிறப்பு ரெயில் (06576) வருகிற 14-ந் தேதி இயக்கப்படுகிறது. கண்ணூரில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்து அதன்பிறகு பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.






