பொங்கல் பண்டிகை - செல்வப்பெருந்தகை வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், செல்வப்பெருந்தகை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உலகத் தமிழர்கள் கொண்டாடும் உன்னத திருநாளான பொங்கல் திருவிழா தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அனைவரும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் வண்ணம் அமைகிறது இந்த பொங்கல் பண்டிகை. எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாக இருக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முன்னோர்களின் வாக்கிற்கிணங்க மக்களின் அனைத்துவிதமான தொடக்கங்களும் தை முதல் நாளில் ஆரம்பித்தல் தொன்று தொட்டு பின்பற்றப்படும் மரபு. உழைப்பை போற்றும் உன்னதத் திருவிழாவான இந் நன்நாளில் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கி நம் அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும்.
பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் ஆகிய முப்பெரும் விழாக்களை தமிழர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிற விழாக்களாகும். உழைப்பின் உயர்வினை உலகிற்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும் அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் திருநாளை தமிழினத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
எனவே, வருகிற பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






