பொங்கல் பரிசுத் தொகை : "தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றம்" - கே.பாலகிருஷ்ணன்

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் சேர்த்து ரொக்கப் பணமும் வழங்கப்படும். கடந்த ஆண்டு 1,000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த சூழலில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது. ரொக்கப் பணம் அறிவிக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு, தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழக நிதியமைச்சர் அவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான்.

இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல. எனவே, தமிழ்நாடு அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000/- வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com