பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

1 கோடியே 80 லட்சம் எண்ணிக்கையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், ரூ.2,500 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை, டெல்டா பகுதிகளிலே புயலினால் கடுமையான மழை, அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை, புயலால், கனமழையால் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை ஆகிய இரண்டும் இந்த ஆண்டை பாதித்திருக்கிறது.

இதையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, தைப் பொங்கலை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை தமிழர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2,500 வழங்கப்படும். அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்.

அதன்படி, தைப் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு ரூ.2,500 ரொக்கத்துடன், சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 9 அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி, தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2021-ம் ஆண்டு ரூ.484 கோடியே 25 லட்சம் செலவில் 1 கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கிடும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கி திட்டத்தினை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மு.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) இல.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் மு.கருணாகரன், சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com