பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது.
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய 3 பேர் நேரில் ஆஜராகினர். பொன்முடி எம்.எல்.ஏ., பொன்.கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, 4 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாதிட்ட நிலையில் அதற்கு பொன்முடி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 7 பேரின் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி பதில் வாதம் செய்து முடித்தனர். இதையடுத்து அரசு தரப்பில் பதில் வாதம் செய்வதற்காக இதன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மணி மொழி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com