பழனி கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜை நடைபெறுகிறது - ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

பழனி கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜை நடைபெறுவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ஆலயம் வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவில் நடைபெறுகிறது.

ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை. இதனால், இந்த கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழா தடைபட வாய்ப்புள்ளது. எனவே, பழனி கோவிலில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விடுமுறை தினமான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், "தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைப்படாது. 48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். கோவிலில் ஆகம விதிப்படியே அனைத்து பூஜையும் நடைபெறுகிறது'' என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com