

சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 118.1 கி.மீ தொலைவிற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் மக்களின் பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது.
இந்த வழித்தடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் நிபந்தனையுடனான ஒப்புதலை பெற்றது. மே மாதத்தில் மெட்ரோ நிறுவனம் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததை தொடர்ந்து, ரெயில்களை இயக்குவதற்கான இறுதி அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்த வழித்தடம் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இது 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் புதிய அரசு பதவியேற்பு போன்ற அரசியல் சூழல்களால் இந்த தொடக்கம் தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. தற்போது ரெயில்களை இயக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், தொடக்க தேதிக்காக காத்திருப்பதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் தொடக்கத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேகத்தை பொறுத்தவரை, பூந்தமல்லி முதல் போரூர் வரை மணிக்கு 80 கி.மீ வேகத்திலும், போரூர் முதல் வடபழனி வரை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் மற்றும் சாலிகிராமம் பகுதியில் உள்ள 2 நிலையங்கள் என மொத்தம் 6 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. எனவே, பணிகள் முடியாத நிலையில் இந்த 6 ரெயில் நிலையங்களும் தொடக்கத்தில் தவிர்க்கப்படும்."
1. பூந்தமல்லி பைபாஸ்
2. பூந்தமல்லி
3. முல்லைத் தோட்டம்
4. கரையான்சாவடி
5. குமணன்சாவடி
6. காட்டுப்பாக்கம்
7. அய்யப்பன்தாங்கல்
8. தெள்ளியகரம்
9. போரூர் பைபாஸ்
10.போரூர் சந்திப்பு
11.வடபழனி