

சென்னை,
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பூந்தமல்லி புறவழிச்சாலைக்கும் வடபழனிக்கும் இடையே போரூர் சந்திப்பு வழியாக இயக்கப்படும், சமீபத்தில் திறக்கப்பட்ட மஞ்சள் வழித்தடத்திற்கான அங்கீகாரம் காலாவதியானது குறித்த ஊடக செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் தற்போதைய அட்டவணையில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம் போல் தொடரும் என்று சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) தெளிவுபடுத்த விரும்புகிறது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகளைத் தொடர்ந்து இயக்குவதற்கும், பயணிகளுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்கும் தேவையான அங்கீகாரத்தை சி.எம்.ஆர்.எல். பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு அல்லது பரப்புவதற்கு முன்பு, ஊடக நிறுவனங்கள் சி.எம்.ஆர்.எல். அதிகாரிகளிடம் நேரடியாகத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் சி.எம்.ஆர்.எல்.-இன் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு வழிகள் மூலமாகவே தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.