கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகம்மது தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முகம்மது ஷேக் அன்சாரி கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பட்டத்தைத் தொடர்ந்து முகம்மது ஷேக் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், சமூக சேவைகள், அரசியல் உள்ளிட்ட முகமூடிகளை அணிந்து இந்தியாவை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படக்கூடிய அமைப்பாகும்.

பேச்சை திரும்பப்பெற வேண்டும்

எங்கள் அமைப்பின் மீது கவர்னர் கூறிய குற்றச்சாட்டுகள் ஆபத்தானவை. அவர் தனது பதவிக்கு அருகதையற்ற பேச்சை பேசியுள்ளார். கவர்னரின் இந்த பேச்சுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. கவர்னர் தனது பேச்சை திரும்பப்பெற வேண்டும்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எந்த ஒரு பயங்கரவாத செயலிலும் ஈடுபடவில்லை.

சட்டரீதியான நடவடிக்கை

கவர்னர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துவருகிறோம். இந்த விவகாரத்தில் பல்வேறு இயக்கங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தபோதிலும், முதல்-அமைச்சர் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com