வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் ஒரே பைக்கில் மதுபோதையில் அதிவேகமாக தெருவுக்குள் வந்த 3 வாலிபர்களை வழிமறித்த பன்றி இறைச்சி வியாபாரி, அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரியை வெட்டிக்கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40), மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு மாதாநகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார்.

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அந்த 3 பேரையும் அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை 2 பேரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

வியாபாரி உயிரிழப்பு

இதில் பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com