

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை நடத்தியதாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். மறுநாள் அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு ஆய்வுக்கு பின் இரவு 8.10 மணியளவில் தொடங்கிய பிரதே பரிசோதனை 11.35 மணிக்கு நிறைவு பெற்றது.