மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும்

மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும்
Published on

மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்பாண்டங்கள்

ஆரோக்கியத்தை அள்ளித்தந்து உடல்நலனை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மண்பாண்டங்கள். ஆதி மனிதனின் முதன்மை தொழிலாக கருதப்படும் மண்பாண்ட தொழிலில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டு வந்தது வரலாற்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல்வேறு வண்ணங்களில் விதவிதமான உருவத்தில் மனதை கவரும் விதத்தில் வீட்டை அலங்கரித்து வந்த மண்பாண்டங்கள் நாகரீகம் என்னும் மாயையால் விடை பெற்றுவிட்டது என்று சமையலில் மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்ததோ அன்றே பல்வேறு விதமான நோய்கள் உடலை தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. அதில் இருந்து மீள முடியாமல் இன்று வரையிலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நாகரீகத்தின் பெயரால் தொலைத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விதவிதமான உருவங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் மகத்துவத்தை உணர்ந்த இன்றைய தலைமுறையினர் மெல்ல மெல்ல அதன் பண்பாட்டுக்கு மாறி வருகின்றனர். ஆனால் பரம்பரை பரம்பரையாக தொழிலில் ஈடுபட்டு வந்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் போதிய உதவி கிடைக்காததால் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மண்பாண்ட உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

அரசு நிதி உதவி

மண்சட்டிகள் உற்பத்திக்கு தேவையான களிமண்ணை நீரோடைகளில் இருந்து சரக்கு வாகனத்தின் மூலமாக எடுத்து வருகிறோம். பின்பு அந்த மண்ணை சலித்து சுத்தப்படுத்தி வெயிலில் காய வைப்போம். நன்றாக காய்ந்த பின்பு மணலில் கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊறவைப்போம். இதையடுத்து அதை நன்றாக மிதித்து பக்குவப்படுத்தி மரச்சக்கரத்தின் மையப்பகுதியில் வைத்து தேவையான உருவங்களில் சட்டிகளை வடித்தெடுப்போம். அதைத்தொடர்ந்து அதன் உருவத்தை ஒழுங்குபடுத்தி நிழலில் உலர்த்தி வெயிலில் காயவைத்து அதன் பின்பு தீ மூட்டி பக்குவப்படுத்தி உருவத்தையும் உறுதித் தன்மையையும் இறுதி செய்கிறோம்.

இவ்வாறாக நாளொன்றுக்கு 20 சட்டிகள் தயாரிக்க முடியும். ஆனால் மண்எடுத்து வருகின்ற செலவு, உற்பத்தி கூலி போன்றவையை கழித்தால் ரூ.300 மட்டுமே கிடைக்கும். முன்பு இந்த பகுதியில் 4 பேர் ஈடுபட்டு வந்த இந்த தொழிலில் தற்போது நான் மட்டுமே ஈடுபட்டு வருகின்றேன். மண்சட்டிகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளான களிமண் தாராளமாக கிடைத்து அரசு நிதியுதவி அளித்தால் ஊக்கத்தோடு உற்பத்தியில் ஈடுபடமுடியும். அதிகப்படியான மண்சட்டிகளை தயாரித்து பொதுமக்களின் உடல்நலனை காக்கும் உன்னதமான தொழிலை திறம்பட செய்ய முடியும். எனவே நலிவடைந்து வருகின்ற மண்பாண்ட தொழிலை புத்துயிர் பெறச்செய்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com