நாமக்கல்லில் பானை, கரும்பு விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் நேற்று பானை, கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
நாமக்கல்லில் பானை, கரும்பு விற்பனை மும்முரம்
Published on

போகி பண்டிகை

நாமக்கல்லில் நேற்று போகிப்பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்த பெண்கள் ஆவாரம்பூ, பூலாம்பூ மற்றும் வேப்பிலையை கொண்டு காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாசலில் பொங்கல் வைத்து வழிபட உள்ளனர். இந்த பூஜையில் கண்டிப்பாக கரும்பு இடம் பெற்று இருக்கும். எனவே நேற்று கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் ஈரோடு, கருங்கல்பாளையம், எடப்பாடி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட கரும்புகள் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், வாரச்சந்தையிலும் கட்டு, கட்டாக விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு ஜோடி அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் அதிகரித்து இருப்பதாகவும், அரசு ரேஷன்கடைகளில் வழங்கும் கரும்புக்கான கொள்முதல் விலையை குறைத்து இருப்பதால், அதன் விலை குறைந்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பொங்கல் பானை

இதேபோல் பொங்கல் பானை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. பானையின் தரத்தை பொறுத்து ரூ.100-ல் இருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டன. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு மகிழுவார்கள். எனவே கோலப்பொடி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. இதுதவிர பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் நேற்று மும்முரமாக நடைபெற்றது. இதனால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com