கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
Published on

கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை. 31-ந் தேதி 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 4, 6, 10 மற்றும் 6 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.

இறக்கை அழுகல் நோய்

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் கோழித்தீவனத்தில் மரவள்ளிக்கிழங்கை தானியங்களுக்கு பதிலாக பயன்படுத்தும் போது தீவனத்தில் புண்ணாக்கு மற்றும் விலங்குவகை புரத அளவை கூட்டி தேவையான அளவு அமினோ அமிலங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எனினும் நாட்டுக்கோழிகளுக்கு தானியங்களுக்கு பதிலாக மரவள்ளி கிழங்கை பயன்படுத்தலாம்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் ரத்தசோகை மற்றும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா ? என பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com