கறிக்கோழி பண்ணை விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோப்புப்படம்
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். தற்போது, இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.
கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற திமுக அரசின் பொம்மை முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






