

சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெறித்து வருகிறது. அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கோடை கால வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் பேன், ஏசி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தங்களுடைய அதிருப்தியை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், மறுநாள் வேலைக்கு செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையை மட்டுமன்றி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்த மின்தடைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் 2 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
மேலும் நேற்று முன்தினம் கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் 4 மணி நேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திடிரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறி உள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தொடரும் மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமைசெயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.