உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடக்கம்

உடன்குடியில் இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடக்கம்
Published on

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி மின் நிலையம் உள்ளது. இங்குள்ள முதல் அனல் மின் அலகில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது உற்பத்தி செய்யப்பட்ட 87 மெகாவாட் மின்சாரம், மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் பல தொழில்நுட்ப சவால்களை கடந்து, தெடர் முயற்சியின் காரணமாக சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சோதனை செய்தபோது 10 தொழில்நுட்ப இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரிசெய்யப்பட்டது. தற்போது, கனரக உலை எண்ணெய் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் இருந்து முனையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

வணிக மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டபடி அனைத்து அலகுகளில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒரு மின் நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின் உற்பத்தி செய்த பிறகு, வணிக மின் உற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கப்படும். எனவே, உடன்குடியில் சோதனை பணிகளை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com