அரசு மருத்துவமனையில் மின்தடை: கனிமொழி குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம்

தற்போது அப்பகுதியில் சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் மின்தடை: கனிமொழி குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம்
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது தூத்துக்குடி தொகுதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டுள்ளது.

எத்தனை முறை கண்டித்தாலும் அரசு திருந்துவதாக தெரியவில்லை. இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்க பணியாற்றும் டாக்டர்களுக்கு எனது பாராட்டுகள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

மின்வாரியம் விளக்கம்

இதற்கு மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பிரிவுக்கு உட்பட்ட கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று முன்தினம் இரவு 7.10 மணியளவில் எச்.ஜி. பியூஸ் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து, இரவு 7.25 மணியளவில் உடனடியாக புதிய எச்.ஜி. பியூஸ் மாற்றப்பட்டு மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

X