

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் பொதுமக்கள், சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகி வந்தது.
தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டரும் விட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்றவற்றால் மின் பிரச்சினை அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
எனினும், தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டு காரணமாக கடும் அவதி அடைவதால், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையிலேயே இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மின்வெட்டால் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா அறை இருளில் மூழ்கியது. அமைச்சர்கள் அறை உள்ள முதல் தளம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்தத் திடீர் மின்தடை எதனால் ஏற்பட்டது என்பது பற்றி மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.