

தென்காசி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் வேட்பாளரை ஆதரித்து கடையநல்லூர் தொகுதியில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் கிருஷ்ணமுரளிக்கு ஆதரவாக, பொதுமக்களை நேரில் சந்தித்து உற்சாகமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டோம்.
இன்று கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் இந்த விடியா திமுக ஆட்சியை எப்போது விரட்டி அடிப்போம் என்ற முடிவு தெளிவாகத் தெரிந்தது, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி, மக்கள் குடுத்த உற்சாக வரவேற்பும் அவர்களின் பங்களிப்பும் நம் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக உள்ளது. வளர்ச்சியும் மக்கள் நலனும் நோக்கமாகக் கொண்ட நம் அணிக்கு, கடையநல்லூர் மக்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மக்கள் சக்தியுடன், நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.