உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார். நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் இன்று நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். ரேபிட் முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தாவிளையாட உள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியை எட்டியதற்காக தமிழ்நாட்டின் இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அபார சாதனையால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமிதம் கொள்கிறது. இறுதிப்போட்டியில் மைல்கல் வெற்றியைப் பதிவுசெய்ய வாழ்த்துகிறோம்" என்று அதில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com