திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட ரூ.4லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை மீட்டெடுத்த தொழிலாளிக்கு பாராட்டு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர்.
திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட ரூ.4லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை மீட்டெடுத்த தொழிலாளிக்கு பாராட்டு
Published on

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்-ஷர்மிளா தம்பதியினர், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது கடலில் நீராடியபோது, மணிகண்டன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.5 சவரன் தங்கச் சங்கிலி எதிர்பாராதவிதமாக அலைகளில் சிக்கி கடலில் விழுந்தது.

நீண்ட நேரம் தேடியும் சங்கிலி கிடைக்காததால், மனமுடைந்த தம்பதியினர் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரிடம் புகார் அளித்துவிட்டு ஊர் திரும்பினர். இதனைத் தொடர்ந்து, கடலோரப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சிவராஜா தலைமையிலான குழுவினரும், உள்ளூர் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் இணைந்து கடலில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சிப்பி அரிக்கும் தொழிலாளியான மனோ என்பவரின் கையில் அந்தத் தங்கச் சங்கிலி சிக்கியது.

தகவல் அறிந்து திருச்செந்தூர் வந்த மணிகண்டனிடம், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜன் முன்னிலையில் அவரது தங்கச் சங்கிலி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. தங்கச் சங்கிலியை நேர்மையுடன் மீட்டுக் கொடுத்த தொழிலாளி மனோவுக்கு, இன்ஸ்பெக்டர் கனகராஜன் மாலை அணிவித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் தேடுதல் பணியில் துரிதமாகச் செயல்பட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுவினருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com