அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏவுக்கு குவியும் பாராட்டு!

எம்.எல்.ஏ. இளங்கோவனின் மகள் தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த  தவெக எம்எல்ஏவுக்கு குவியும் பாராட்டு!
Published on

மானாமதுரை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாங்கள் மற்றும் தங்களது உறவினர்களுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்வார்கள் என்றும், அவர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியிருந்தார்.

மானாமதுரை எம்.எல்.ஏ.

இந்த நிலையில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவான இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ள சம்பவம் பலரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி

எம்.எல்.ஏ. இளங்கோவனின் மகள் தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், அவரை திருப்புவனம் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசு பள்ளியிலேயே மகளை தொடர செய்துள்ளார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. இளங்கோவன் கூறுகையில், தான் அரசு பள்ளியில் படித்ததாகவும், தனது மகளும் அரசுப்பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருப்புவனம் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com