பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்


தினத்தந்தி 11 Feb 2025 12:15 PM IST (Updated: 11 Feb 2025 2:13 PM IST)
t-max-icont-min-icon

த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளையும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர், அ.தி.மு.க.வில் இருந்து வந்த சி.டி.நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர், நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பிரமுகர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில், பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மதியம் 3 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற்றது. அப்போது தமிழக அரசியல் நிலவரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..? எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும்..? மக்களின் மனங்களை கவருவதற்காக என்னென்ன பிரசார யுக்திகளை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2ம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்காக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்ற அடிப்படையில் வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. அதை வைத்து கணக்கிடும்போது, 2.25 கோடி வாக்குகளை விஜய் கட்சி பெற திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story