வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு - கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி
கோப்புப்படம்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள புஞ்சைதளவாய் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (60 வயது). இவரது மனைவி பழனியம்மாள் (58 வயது). முன்னாள் ஊராட்சி தலைவர். இவர்களது மூத்த மகன் குழந்தைசாமி (36 வயது) விவசாயி. இவரது மனைவி சசிகலா (32 வயது). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சசிகலா ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வந்தார். முதல் பெண் குழந்தையை மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த சசிகலா மீண்டும் கர்ப்பமானார்.

இந்த நிலையில் இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்த தம்பதி, எந்த மருத்துவமனைக்கும் சென்று மருத்துவரின் ஆலோசனை பெறாமல் இருந்து வந்தனர். மேலும், கர்ப்பிணிகளுக்குரிய தடுப்பூசி மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளாமலும் சசிகலா இருந்ததாக கூறப்படுகிறது. இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க இவர்களது பெற்றோர்களையும் சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, சசிகலாவின் தாயார் சுலோச்சனா மற்றும் மாமியார் பழனியம்மாள், கணவர் குழந்தைசாமி ஆகியோர் சசிகலாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது சசிகலாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சசிகலாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றும் ரத்தப்போக்கு சரியாகாத நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட காரணத்தினால் அங்கிருந்த மருத்துவர்கள் சசிகலாவின் கர்ப்பப்பையை அகற்றியதாக கூறப்படுகிறது. அதன் பிறகும் சசிகலா மோசமான நிலையில் இருந்ததோடு, சுயநினைவு இல்லாமல் இருந்தார். இதன் காரணமாக அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதார துறையினர் மற்றும் போலீசார், இறந்த பெண்ணின் கணவர், மாமியார் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பிரசவம் பார்த்ததால், கர்ப்பிணி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com