ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது


ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2025 6:56 AM IST (Updated: 7 Feb 2025 2:55 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

ஜோலார்பேட்டை,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 4 மாத கர்ப்பிணியான அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக நேற்று கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தார்.

ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது இளம் பெண் கழிவறைக்கு சென்றார். அங்கு போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் வேறொரு பொது பெட்டிக்கு சென்று தப்பினர்.

அதன் பின்னர் தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், கே.வி.குப்பத்தை அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமராஜ் இதைபோல் ரெயிலில் பயணித்தபோது பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story