‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை குடும்பத்துடன் பார்த்த பிரேமலதா... விஜயகாந்தை பார்த்ததும் கண்கலங்கினார்


‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை குடும்பத்துடன் பார்த்த பிரேமலதா... விஜயகாந்தை பார்த்ததும் கண்கலங்கினார்
x

‘கேப்டன் பிரபாகரன்’ படம் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நெய்வேலி,

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 1991-ம் ஆண்டு நடித்து வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’. இது அவரது 100-வது படம் ஆகும். இந்த படத்தின் மூலம் தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற அடைமொழி கிடைத்தது.

இந்த நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் புதுப்பொலிவுடன் நேற்று திரைக்கு வந்தது. ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள சினிமா தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் பார்த்தார். அப்போது தேமுதிக மாநில பொருளாளர் சுதீஷ், விஜயகாந்தின் மகனும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான விஜயபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திரையில் விஜயகாந்த் தோன்றியதை பார்த்த பிரேமலதா விஜயகாந்த் இருகைகளையும் கூப்பி அவரை கும்பிட்டபடி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அருகில் இருந்த விஜயபிரபாகரனும் கண்கலங்கியபடி ரசிகர்களுடன் சேர்ந்து விசில் அடித்தும், கைதட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார். சில ரசிகர்களும் கண்கலங்கியதை காண முடிந்தது. பிரேமலதா அழுததை பார்த்த விஜயபிரபாகரன், சுதீஷ் இருவரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பிரேமலதா, நிருபர்களிடம் கூறும்போது, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் கேப்டன் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்ப எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி உள்ள ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story