வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்த பணி: தலைமை செயலாளர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்த பணி: தலைமை செயலாளர் ஆலோசனை
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நீர்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகள் மழைநீரை சேமித்து வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக மேற்படி மையங்களை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்து, வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

கரைகளை பலப்படுத்த வேண்டும்

சாலை சேதங்களை உடனுக்குடன் செப்பனிட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்திட வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

நீர்வழி, கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் நகராட்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

நீர் வழிகளின் கரைகளை பலப்படுத்த போதுமான மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும். வெள்ளநீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

தொற்று நோய்

மழை மற்றும் வெள்ள காலங்களில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடை பராமரிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com