ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந்தேதி தமிழகம் வருகை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந்தேதி தமிழகம் வருகை
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒருநாள் பயணமாக வரும் 18-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 18-ந்தேதி காலை திருவனந்தபுரத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்திறங்குகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி, தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றி பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் கரை திரும்பிய பிறகு, சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள விவேகானந்தா கேந்திராவிற்கு கார் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.

அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தரும் ஜனாதிபதி, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தரையிறங்கி ஒத்திகை செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com