துக்கம் விசாரிப்பதாக கதறி அழுவதுபோல் நடித்து 13 பவுன் நகை திருட்டு

கலசபாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதுபோல் காரில் வந்து கதறி அழுத பெண் 13 பவுன் நகையுடன் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துக்கம் விசாரிப்பதாக கதறி அழுவதுபோல் நடித்து 13 பவுன் நகை திருட்டு
Published on

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதுபோல் காரில் வந்து கதறி அழுத பெண் 13 பவுன் நகையுடன் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் ஊராட்சி தலைவர்

கலசபாக்கத்தை அடுத்த சிறுக்களாம்பாடி கிராமத்தில் ஊராட்சி தலைவராக இருந்த தனபால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது மனைவி பூங்குழலி (வயது 59) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பூங்குழலி நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென ஒரு கார் வீட்டின் முன்பு வந்து நின்றது.

காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பெண் உள்பட 4 பேர் வீட்டின் அருகே உள்ள பூச்செடியில் பூவை பறித்துக் கொள்வதாக கேட்டுள்ளனர். இதற்கு பூங்குழலி சம்மதிக்கவே அவர்கள் பூவை பறிப்பது போன்று நோட்டமிட்டு கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர்.

உடனே பூங்குழலி தண்ணீர் எடுத்து வருவதற்காக வீட்டுக்குள் சென்று உள்ளார். அப்போது 4 பேரில் இருந்த ஒரு பெண், பூங்குழலியை பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார்.

கதறி அழுவதுபோல் நடித்து...

அங்கு இறந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால் படம் சுவரில் மாட்டப்பட்டு இருந்தது. அதனை பார்த்த அந்த பெண், பூங்குழலியிடம், ''இவர் எப்போது இறந்தார். இவர் எனக்கு மிகவும் தெரிந்தவர். நல்லவர்'' என்று வருத்தப்பட்டு அழுவதுபோல் கதறி உள்ளார்.

இதனால் தனபாலின் மனைவி பூங்குழலி மனம் தளர்ந்து சோகத்துடன் நின்றுள்ளார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நகையைப் பார்த்த மர்ம பெண், அந்த நகையை போட்டோவுக்கு அணிவியுங்கள். நாங்கள் பார்த்து ஒரு முறை வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். அப்போது வெளியில் அவருடன் இருந்த 3 பேரும் வந்தனர்.

அப்போது பூங்குழலி கழுத்தில் இருந்த 7 பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த நகைகள் உள்பட 13 பவுன் நகையை எடுத்து வந்து கணவர் தனபாலின் படத்துக்கு அணிவித்தார்.

பின்பு அவர்கள் போட்டோவை பார்த்து வணங்குவதை போல நடித்துவிட்டு பிறகு குடிப்பதற்கு ஏதாவது தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது பூங்குழலி அவர்களுக்கு டீ போடுவதற்காக சென்றுள்ளார்.

நகையை திருடிக்கொண்டு தப்பினர்

இதனை பயன்படுத்திய அந்த மர்மப் பெண் உள்பட 4 பேரும் படத்தில் போடப்பட்டிருந்த 13 பவுன் நகையை திருடிக்கொண்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

சற்று நேரத்தில் டீயுடன் சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்குழலி போட்டோவை பார்த்தபோது அதில் இருந்த நகையும் காணாததால் கூச்சலிட்டு அருகில் வசிக்கும் உறவினர் ராமஜெயத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கம் அருகே மர்ம பெண் நகையை திருடி சென்றுள்ளார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் தான் கும்பலுடன் பூங்குழலி வீட்டில் நகை திருடியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com