திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி: 100-க்கும் மேற்பட்ட இலை கட்டுகள் தேக்கம்

போதிய ஆட்கள் இல்லாததால் அதே ஒரு கட்டு வாழை இலை வெறும் ரூ.300-க்கு மட்டுமே கேட்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி: 100-க்கும் மேற்பட்ட இலை கட்டுகள் தேக்கம்.
வாழை இலை கட்டுகள்
Published on: 

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வாழை இலை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததாலும், போதிய விலை கிடைக்காததாலும் 100-க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த மாதத்தை விட விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

வாழை இலை வரத்து

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கானூர், கலியாந்தூர், கல்லூரணி உள்ளிட்ட கிராமங்களில் வாழை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தரமான வாழை இலைகள் தினமும் திருப்பாச்சேத்தி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்படுகின்றன.

வியாபாரிகள் வருகை குறைவு

சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் முக்கியப் பண்டிகைகள் எதுவும் இல்லாததால், வாழை இலைகளுக்கான தேவை சந்தையில் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளின் வருகை இன்றி மார்க்கெட் கலையிழந்து காணப்படுகிறது.

விலை கடும் சரிவு

கடந்த மாதம் பண்டிகை மற்றும் முகூர்த்த சீசன் காரணமாக வாழை இலைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000 வரை விறுவிறுப்பாக விற்பனையானது. ஆனால், தற்போது போதிய ஆட்கள் இல்லாததால் அதே ஒரு கட்டு வாழை இலை வெறும் ரூ.300-க்கு மட்டுமே கேட்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை

கொண்டு வந்த வாழை இலைகளுக்கு வெட்டிய கூலி மற்றும் வாகன வாடகை கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. போதிய விலை கிடைக்காததாலும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததாலும் 100-க்கும் மேற்பட்ட இலை கட்டுகள் மார்க்கெட்டிலேயே தேங்கி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகளும், உள்ளூர் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

X