ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மதுரை மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Published on: 

மதுரை,

நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாட் டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.

ஆயுத பூஜை

மதுரை மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் சாகுபடி செய்யக்கூடிய பூக்கள், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு தமிழகம் மட்டுமின்றி விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் விசேஷ நாட்கள் இல்லாததால் ஒரு மாதமாகவே பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. தற்போது மழை பெய்து வருவதாலும், விழாக்காலம் என்பதாலும் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். காலை நேரத்தில் மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்றது. நேரம் செல்ல செல்ல சற்று விலை குறைந்து ரூ.1500-க்கு விற்றது.

மற்ற பூக்கள் விலை

இதேபோல் மற்ற பூக்கள் விலை விவரம் (கிலோ கணக்கில்) வருமாறு:-

பிச்சி ரூ.900 முதல் ரூ.1,000, முல்லை ரூ.800 முதல் ரூ.900, கனகாம்பரம் ரூ.1500 முதல் ரூ.1800, அரளி ரூ.500 முதல் ரூ.600, துளசி ரூ.50 முதல் ரூ.70, பன்னீர் ரோஜா ரூ.350 முதல் ரூ.400, வில்வம் ரூ.200 முதல் ரூ.250, மரிக்கொழுந்து ரூ.200 முதல் ரூ.250, அருகம்புல் ரூ.50 முதல் ரூ.70, செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.300, சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350, செண்டு ரூ.80 முதல் ரூ.120, கோழிக்கொண்டை ரூ.120 முதல் ரூ.150, தாமரை (ஒன்று) ரூ.20 முதல் ரூ.25 என விற்பனையானது. தொடர்ந்து மழை பெய்தால் வரத்து குறைந்து மல்லிகைப்பூ விலை இனி வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com