நெய், சர்க்கரை விலை உயர்வால் கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு

கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் வகைகள் திடீர் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு; வணிகர் சங்கம் அறிவிப்பு.
Published on

கோவில்பட்டி,

சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கோவில்பட்டியில் இனிப்பு, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகக் கோவில்பட்டியில் இனிப்பு, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளதாகக் கோவில்பட்டி லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி, மிட்டாய் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இனிப்பு, கார வகைகள் விலை உயர்வு

சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் உயர்த்தப்பட்டுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளின் புதிய விலை பட்டியல் (கிலோவில்) பின்வருமாறு:

இனிப்பு வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 340-ஆக உயர்வு.

கார வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 320-ஆக உயர்வு.

சிப்ஸ் மற்றும் கேக் வகைகள்- ரூ.400-லிருந்து ரூ.500-ஆக உயர்வு.

ஸ்வீட்ஸ்; பெரி வகைகள்- கிலோவுக்கு ரூ.80 உயர்வு.

ரஸ்க் வகைகள்- கிலோவுக்கு ரூ.60 உயர்வு.

பன் வகைகள்- கிலோவுக்கு ரூ.30 உயர்வு.

முந்திரி ஸ்வீட் வகைகள்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு.

மில்க் & நெய் ஸ்வீட்ஸ்- ரூ.500-லிருந்து ரூ.600-ஆக உயர்வு.

பிளாக் பாரஸ்ட் கேக்- ரூ.700-லிருந்து ரூ.800-ஆக உயர்வு.

மக்ரூன்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு.

மூலப்பொருட்கள் விலை உயர்வு; வணிகர் சங்கம் அறிவிப்பு

திடீர் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சர்க்கரை, நெய் உள்ளிட்ட ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் தொழிலாளர்களின் ஊதியமும் கணிசமாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையை வேறு வழியின்றி உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

இந்தத் திடீர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "ஏற்கெனவே சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானிய மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு மூலப்பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com