ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்; இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்களின் சாவிகள் ஒப்படைப்பு

ஈரோட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்களின் சாவிகளை ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்; இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்களின் சாவிகள் ஒப்படைப்பு
Published on

ஈரோட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்களின் சாவிகளை ஒப்படைத்தனர்.

விடுப்பு எடுத்து போராட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதற்காக அவர்கள் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு உரிய தொகையை முழுமையாக அரசு தரப்பில் இருந்து திருப்பித்தர வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல்நோக்கு சேவை மையம் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன் சிறுசரக்கு வாகனங்கள் ஆகியவற்றை கட்டாயமாக வாங்க வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சாவிகள் ஒப்படைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர், நெல் அறுவடை எந்திரம் உள்ளிட்ட வாகனங்களின் சாவிகளை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒப்படைத்தனர். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பணியாளர்களின் போராட்டம் காரணமாக கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன், நகைக்கடன், பூச்சி மருந்து வினியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com