தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்: நயினார் நாகேந்திரன் தகவல்

பல்வேறு நாடுகளை கைப்பற்றியவர் ராஜேந்திர சோழன். அவர் போல உலகெங்கும் சென்று வெற்றி வாகை சூடும் நபராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்: நயினார் நாகேந்திரன் தகவல்
Published on

திருச்சி பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து 4,500 கோடி ரூபாய்க்கு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து மறுநாள் திருச்சி வந்து தங்குகிறார். பின்னர் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கோவிலை பார்வையிட்டு கலை, கலாசார விழாவில் கலந்து கொள்கிறார். பல்வேறு நாடுகளை கைப்பற்றியவர் ராஜேந்திர சோழன். அவர் போல உலகெங்கும் சென்று வெற்றி வாகை சூடும் நபராக பிரதமர் மோடி இருக்கிறார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறித்த கேள்விக்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நடந்துள்ளது. 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை. லாக்கப் மரணம் நடக்கிறது. ஏழு பவுன் நகைக்காக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாருக்காக சொல்கிறார் கே.எஸ்.அழகிரி, சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளதா? இதெல்லாம் அவர் வீட்டில் நடந்தால் அவருக்குத் தெரியும். தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர், எனது தொகுதிக்கு மக்கள் வைத்த கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன்.

உங்களுடன் முதல்வர் திட்டத்தை அரசு அதிகாரிகளை கொண்டு நடத்துகின்றனர். அரசு அதிகாரிகள் கண்டிப்பாக ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு போன்று 2 கோடி பேரை சேர்த்துள்ளனர் என திமுக கூறுகிறது.

தமிழக முதல்வர் வந்தால் கொடி ஊன்றுவதும், மற்ற கட்சி தலைவர்கள் வந்தால் கொடியை அகற்றுவதும் திமுக ஆட்சியில் நடக்கிறது. என்னை பொருத்தவரை திமுக இந்த நாட்டில் இருக்கக் கூடாது. குர்ஆன் மீது ஆணையாக பாஜகவுடன் கூட்டாளி இல்லை என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, அது அவருடைய தனிப்பட்ட கருத்து குர்ஆன், பகவத்கீதை போன்றவற்றை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com