பிரதமர் மோடி மீண்டும் 11-ந் தேதி தமிழகம் வருகை: திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் இம்மாதம் (மார்ச்) 1-ந் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
பிரதமர் மோடி மீண்டும் 11-ந் தேதி தமிழகம் வருகை: திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
Published on

திருச்சி,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி) , அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணியில், இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை என்றாலும், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து தலைவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி வருகை

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அதிமுகவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசினார்.

திருச்சியில் 11-ந் தேதி பொதுக்கூட்டம்

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் இம்மாதம் (மார்ச்) 1-ந் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றதுடன், மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், வரும் 11-ந் தேதி (புதன்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேச இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டுள்ளார்.

அடுத்ததாக, கன்னியாகுமரி மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com