மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய் பயணம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய் பயணம்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது மெட்ரோ ரெயில் சேவை குறித்து பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தை முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும்.

பின்னர் பிரதமர் மோடி யுபிஐ மூலம் பணம் செலுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற்றார். தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது மெட்ரோ பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து ரூ.3,700 கோடி மதிப்​பிலான முக்கிய தேசிய நெடுஞ்​சாலைத் திட்டங்​களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்​களைத் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.750 கோடி மதிப்பில் ரெயில்வே உள்கட்​டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் கடல்சார் உள்கட்​டமைப்பை வலுப்​படுத்​த​வும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்​கவும் சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்​டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com