

புதுடெல்லி,
இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும், இதுவரை இல்லாத அளவாக 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன; மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார்.
இந்தநிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 3.14 லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.