

சென்னை:
பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.64 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் வருகையையொட்டி கட்சியினர் அதிக அளவில் திரண்டு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போரூர், நந்தம்பாக்கம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட இடங்களில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் தலா 3 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினரை திரட்டி வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சியினரை திரட்டி, கட்சி கொடிகளுடன் பிரதமரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
போரூர் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் மோடி காரில் சென்னை ஐ.ஐ.டி.க்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சைதாப்பேட்டை சின்னமலை முதல் கிண்டி வழியாக சென்னை ஐ.ஐ.டி. வரையிலான சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையின் இருபுறமும் கட்சியினரும் பொதுமக்களும் திரண்டு பிரதமரை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். மேலும், பிரதமர் செல்லும் வழித்தடத்தையும் பார்வையிட்டு, எத்தனை பேரை திரட்டி வரவேற்பு அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.